ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? – மாற்கு 4: 35 – 40
ஏசாயா 41:10 “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”
கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த தேவ ஜனமே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உங்களோடு இருப்பதாக. கர்த்தர் இம்மாதம் முழுவதும் உங்களோடிருந்து உங்களுக்குச் சகாயம்பண்ணி, தமது வலது கரத்தினாலே தங்களைத் தாங்குவாராக!
மேற்கண்ட பகுதி நமக்கு நன்கு தெரிந்த பகுதி– இயேசு காற்றையும் கடலையையும் அதட்டினார். நடந்தது என்ன? இயேசுவும் சீஷர்களும் பிரயாணம் செய்த படகில், சுழல் காற்றினால் உண்டான அலைகள் மோத, சீஷர்கள் பயந்தனர். இப்படிப்பட்ட சுழல் காற்று அவர்களுக்கு புதிதல்ல. மலைகள் சுற்றியுள்ள பகுதியாகையால், அடிக்கடி சுழல் காற்று உண்டாவது வழக்கம். அப்போது 40 அடி உயர அலைகள் உண்டாகுமாம். ஆனால் வசனம் சொல்கிறது, ‘அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள்.’ ஆகவே, அவர்கள் எப்போதும் சந்திப்பதைவிட மிகவும் பயப்படக்கூடிய காற்றையும் அலையையும் சந்தித்திருக்க வேண்டும். அவர்களுக்கு மடிந்துவிடுவோமோ என்ற பயம் ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இயேசு
- அயர்ந்த நித்திரையில் இருந்தார். எந்த சூழ்நிலையையும் சந்திக்க நமக்குக் கற்றுத்தருகிறார். ‘அமர்ந்திருங்கள்’ சங். 46:10 > ‘நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்’ எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், அமர்ந்திருக்கக் கற்றுக்கெள்வோம்.
- காற்றையும் கடலையும் அதட்டினார். அவருக்கு சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.‘அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்’ எதை அதட்டுகிறார்? – காற்றை – மனிதனால் பார்க்க முடியாததை. இந்த நாட்களிலே, நானும் நீங்களும் கரோனாவை அதட்டி கட்டவேண்டும். நம் வீட்டிற்கு வரும் நோயை இயேசுவின் நாமத்தில் அதட்டவேண்டும்.
- மிகுந்த அமைதல் உண்டாயிற்று. பூட்டப்பட்ட அறையில், இயேசு உயிர்த்தெழுந்த பின் சீஷர்கள் பயந்து இருக்கும்போது, இயேசு அவர்கள் மத்தியில் வந்து, உங்களுக்கு சமாதானம் என்றார். பயம் நீங்க அமைதி உண்டானது. சீறிய கடல் அமைதியானது.
ஆம், பிரியமான சகோதரனே, சகோதரியே, சீறும் கடல் உனக்கு முன் காணப்படலாம். ஆனால் கர்த்தர் உனக்கு வாக்குக்கொடுக்கிறார் – “பயப்படாதே!” பொருள் என்ன? “தைரியமாயிரு, புயலை சந்தி!” சங்கீதக்காரன் சொல்கிறார், “உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து செல்வேன்” (சங். 18:29) உன்னை பலப்படுத்துவார். தமது கரத்தினாலே தாங்குவார், “உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.” (ஏசாயா46:4) என்கிறார்.
இந்த இயேசுவின் கரத்தில் ஒப்புக்கொடு; சும்மாயிரு; இம்மாதம் முழுவதும் மகிழ்ச்சியை அனுபவி!
ஜெபம்: அன்பு பிதாவே, பயங்களை உதறி தள்ளி, உம் வாக்குத்தத்தத்தை பிடித்து இம்மாதத்தை தைரியமாய் சந்திக்க என்னை ஒப்புக்கொடுக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஏற்றுக்கெள்ளும், பிதாவே. ஆமேன்.
Recommended Posts
‘பிந்தின மகிமை…!’
September 05, 2024
கடன் இல்லாமல் வாழ..!
July 21, 2018
யாபேசின் ஜெபம்!
July 21, 2018